2018-07-26

அத்துச்சாரியை பெயரிற்கு முன்னும் வரும்

பெரும்பாலும் மகரத்தில் முடியும் சொற்களுக்கு அத்துச்சாரியை வரும். மரத்தை நோக்கினேன். பழத்தினது சுவை. ஆயிரத்தில் ஒருவன். மகரத்தில் முடியும்.

குறிப்பாக, எத்தறுவாயில் இறுதி டகரம் றகரம் இரட்டிக்குமோ அத்தறுவாயில் மகரத்தில் முடிவனவிற்கு அத்துச்சாரியை வரும். எப்படி மாடு + வண்டி, ஆறு + மீன், குருடு + கண் முறையே மாட்டுவண்டி, ஆற்றுமீன், குருட்டுக்கண் எனப் புணர்ந்தன, அதுபோல் மரம் + மேல், பழம் + ஈ, ஆயிரம் + நூறு ஆகியவை முறையே மரத்துமேல், பழத்து ஈ, ஆயிரத்துநூறு எனப் புணரும்.

மேலும், இவ்விதிமுறை பெயர்களுக்கும் பொருந்தும். இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் “இராமநாதபுரத்துச் சீனிவாச அய்யங்கார்”. மகாராசபுரத்தில் பிறந்தவர் “மகாராசபுரத்து விசுவநாத அய்யர்”. கும்பகோணத்தில் வாழ்ந்தவர் “கும்பகோணத்து இராசமாணிக்கம் பிள்ளை”. மாம்பலத்தில் வசிக்கும் தாத்தா “மாம்பலத்துத் தாத்தா”. பல்லாவரத்தில் வாழும் மாமன் “பல்லாவரத்து மாமன்”.

இக்காலத்தில் இந்த வழி மீறி சொல்வோர் பலர் உண்டு. ஆனால் மலையாளத்திலும் கன்னடத்திலும் இம்முறை கெடாது இருக்கின்றது. “குறியேடத்துத் தாத்திரி” என்பவர் கேரளத்தில் சுமார் நூறாண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் குற்றவிசாரணையில் இடம்பெற்றார். இந்நாளும் “குறியேடத்து நாராயணன்” என பெயர்கள் உள்ளன. பிரபல முன்னாள் திரைப்பட இசையமைப்பாளரின் முழு பெயரானது “மனயங்கத்து விசுவநாதன்”. கன்னடம் பேசும் ஒருவரின் குடும்பப்பெயரின் தமிழாக்கம் “மடத்து”. அதாவது மடத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பெயர். தமிழிலும் இவ்வழியினைக் காத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment